இக்கோயில் திருப்புலியூர் மகாவிஷ்ணு கோயில் என்றும், 'பீமன் கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது. சிபிச்சக்கரவர்த்தியின் மகன் வருஷாதர்பி அரசாண்டபோது ஸப்தரிஷிகள் (அத்திரி, காசியபர், கௌதமர், வசிஷ்டர், பரத்வாஜர், விசுவாமித்திரர், ஜமதக்கினி) அங்கு வந்தனர். அரசன் அவர்களுக்கு தானம் செய்ய முன்வர, நாட்டில் வறுமை உள்ளதால் தங்களால் தானத்தை ஏற்க இயலாது என்று ஸப்தரிஷிகள் கூறிவிட்டு சென்றனர். பின்னர் தனது அமைச்சர்கள் மூலம் பொன் கலந்த பழங்களை கொடுத்தனுப்ப, முனிவர்கள் அதையும் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் கோபம் கொண்ட வருஷாதர்பி ஒரு வேள்வியைச் செய்து, அதில் 'க்ருத்யை' என்ற தேவதையை உண்டாக்கி முனிவர்களைக் கொல்ல அனுப்பினான்.
ஸப்தரிஷிகள் மகாவிஷ்ணுவைத் துதிக்க, அவர் இந்திரனை அனுப்பினார். இந்திரன் புலியாக மாறி, அந்த தேவதையைக் கொன்றான். அதனால் இந்த ஸ்தலத்திற்கு 'திருப்புலியூர்' என்ற பெயர் ஏற்பட்டது. ஸப்தரிஷிகளின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீமந் நாராயணன், மாயப்பிரானாகத் தோன்றி காட்சி அளித்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது.
மூலவர் மாயப்பிரான் என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். பஞ்ச பாண்டவர்களுள் ஒருவரான பீமன் ஜீர்ணோத்தரணம் செய்து வழிபட்டதால் 'பீமன் பிரதிஷ்டை' என்றழைக்கப்படுகிறது. தாயாருக்கு பொற்கொடி நாச்சியார் என்பது திருநாமம். ஸப்தரிஷிகளுக்கு பகவான் பிரத்யக்ஷம்.
திருமங்கையாழ்வார் ஒரு பாசுரமும், நம்மாழ்வார் 11 பாசுரங்களுமாக மொத்தம் 12 பாசுரங்கள் பாடியயுள்ளனர்.
இக்கோயில் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|